‘பாரத் விகாஸ் சங்கல்ப் யாத்திரை’ என்ற இந்த பயணம் மூலம் நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு மத்திய அரசின் திட்டங்களை நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை பிரச்சாரப் பயணம் செய்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் கடந்த நவம்பர் 15 -ம் தேதி இந்த யாத்திரை தொடங்கியது.
இதற்காக வை ஃபை, டிஸ்பிளே, ஸ்பீக்கர், நேரலையில் கலந்துரையாடும் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட 2,700-க்கும் மேற்பட்ட வேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இந்த வேன் திரையில் பிரதமர் நரேந்திர மோடி தோன்றி மக்களின் சில கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். இந்த வேன்கள், 3,700 நகராட்சிகள், 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் வகையில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு இந்த வேன்கள் சென்று வருகின்றன.
அந்த வகையில்,வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ஏரிகுத்தி என்ற பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீ தேவி மற்றும் பாஜக மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரேகா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ‘பாரத் விகாஸ் சங்கல்ப் யாத்திரை’ வாகனம் வந்தது. இந்நிகழ்ச்சியில் பாஜக கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். அப்போது பாஜக ஒன்றிய தலைவர் பொறுப்பில் உள்ள வனஜா தாமதமாக வந்து இருக்கிறார். அவர் வருவதற்கு முன்பாகவே நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த வனஜா, தான் வருவதற்கு முன்பே எப்படி நிகழ்ச்சியைத் தொடங்குவீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதற்கு மற்ற பாஜக பெண் நிர்வாகி ரேகா தரப்பில் பதிலளிக்க இரு தரப்பிலும் வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டுக்கொண்டார்கள். அப்போது பாஜக நிர்வாகிகள் வனஜாவும் ரேகாவும் செருப்பை கழட்டி ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.