தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பக்தர்கள் பல்வேறு குறைகளை தெரிவித்தனர். குறிப்பாக கோயிலுக்கு பின் பகுதியில் சுவாமி வீதியுலா வரும் இடம் கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோயில் வளாகத்தில் இருந்த பழமையான மாமரம் முன்னறிவிப்பின்றி அகற்றப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த கோயில் செயல் அலுவலர் கோபால மணிகண்டன், அப்பகுதியில் வேலி அமைத்துக் கொடுப்பதாக தெரிவித்தார்.
அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘செயல் அலுவலர் அப்பிரச்னையை சரி செய்துள்ளாரா? என்பதை 10 நாட்களில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பார்வையிடுவார். அதன் பிறகும் பணி நடைபெறவில்லை எனில் நானே அங்கு வந்து அது சரி செய்யப்படும் வரை அங்கிருந்து நகர மாட்டேன்,’ என்றார். இதற்கு அறநிலையத்துறை இணை ஆணையர் நிச்சயம் அந்த பணிகளை செய்து முடிப்போம், என்றார்.
இதற்கிடையே, நிர்மலா சீதாராமனிடம் ஒருவர், அதில், மழை வெள்ளத்தால் உயிரிழந்த கால்நடைகளால் ஏற்பட்ட இழப்புக்கு லோன் கேட்டு வங்கி சென்றால் ஆடு, மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்களிடம் இறப்பு சான்றிதழ் வாங்கி வர சொல்கிறார்கள். நாங்கள் யாரை போய் கேட்பது என்று வேதனை தெரிவித்தனர். இதை கேட்ட நிர்மலா சீதாராமன், நான் சொல்கிறேன் என கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.