லேடி வெலிங்டன் பள்ளியில் திமுக – தவெகவினர் இடையே திடீர் மோதல்..!

லேடி வெலிங்டன் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் தொடர்பான முகாமில் மேஜை போடுவது தொடர்பாக திமுக மற்றும் தவெக இடையே இன்று திடீரென்று மோதல் ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி மாவட்ட வாரியாக இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதோடு 2025 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தபணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பட்டியலில் ஏற்கெனவே உள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்தல், ஆதார் எண் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதுதவிர 01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 09.11.2023, 10.11.2024, 23.11.2024 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடந்தது.

கடைசி நாளான இன்று மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. அதன்படி சென்னை அயோத்தி குப்பத்திலுள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் இன்று சிறப்பு முகாம் தொடங்கியது. இந்த சிறப்பு முகாமை தொடர்ந்து பள்ளியின் எதிரே தவெகவினர் கட்சி கொடியுடன் அமைத்து இருந்த மேஜைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக மாறியது. இதுபற்றி தகவல் அறிந்த மெரினா காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் அயோத்தி குப்பம் லேடி வெலிங்டன் பள்ளியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.