ராகுல் காந்தியை மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா சந்திப்பு..!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் 100 கிராம் கூடுதல் எடை இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். பாரிஸிலிருந்து இந்தியா திரும்பியதும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக நின்றார்.

முன்னதாக கடந்த ஆண்டில் இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் தொல்லை புகார் அளித்தவர் வினேஷ் போகத். இவருக்கு உறுதுணையாக பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் நின்று போராட்டத்தை நடத்தினர். இருவருமே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை நேற்று நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இதன்மூலம் ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் இம்முறை இருவரும் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.