பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி உலகம் முழுவதும் தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் நிருபர்கlகளிடம் பேசுகையில், பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவரது நலனுக்காக வேண்டுகிறேன். முன்னாள் பிரதமர்களின் பிறந்தநாட்கள், ஏதேனும் ஒரு தினமாக கொண்டாடப்படுகிறது.
நேரு பிறந்தநாள், குழந்தைகள் தினமாகவும், இந்திரா காந்தி பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அதுபோல், மோடி பிறந்தநாள், வேலையில்லா திண்டாட்ட தினமாகவும், விவசாய எதிர்ப்பு தினமாகவும், விலைவாசி உயர்வு தினமாகவும், பொருளாதார மந்தநிலை தினமாகவும், நெருக்கமான முதலாளித்துவ நண்பர்கள் தினமாகவும், சி.பி.ஐ. சோதனை தினமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 7 ஆண்டுகளாக நீங்கள் பல்வேறு துறைகளிலும் தோல்வி அடைந்திருக்கிறீர்கள். அதனால் நாட்டை எங்கு இட்டுச் சென்றிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளும் அறிவை கடவுள் வழங்கட்டும். உங்கள் தோல்விகளுக்காக நாடு விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. மோடியின் வானளாவிய உறுதிமொழிகளையும் மீறி, வேலையில்லாதவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்ன ஆனது? அதே சமயத்தில், 61 லட்சம் அரசு வேலைகள் ஏன் காலியாக இருக்கிறது? விவசாயிகள், தீர்வுக்கான அறிகுறியே தெரியாமல் 9 மாதங்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பெட்ரோல், டீசல், கியாஸ், பருப்பு, சமையல் எண்ணெய் விலை உயர்வால் மக்கள் நிலை திண்டாட்டமாக இருக்கிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவை பொருளாதாரத்தை முடக்கி விட்டன. சிறு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. இருப்பினும், உங்கள் நண்பர்களுக்காக இந்தியாவை விற்பனைக்கு வைத்திருக்கிறீர்கள். கொரோனா தீவிரமாக இருந்தபோது, மோடி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இருந்தார். சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறார் என தெரிவித்தார்.