மேற்கு வங்கத்தில் உள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று கூச் பெஹார், அலிபுர்துவார், ஜல்பைகுரி என 3 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்ததுமே, பல வாக்குச்சாவடிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் – பாஜக ஆதரவாளர்கள் இடையே மோதல்கள் வெடித்தன.
இந்த மோதல் வன்முறையாக வெடிக்க நாட்டு வெடிகுண்டு, கல் வீச்சி தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த அனந்த் பர்மன் என்ற உள்ளூர் பிரமுகர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக தொண்டர்களால் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரைப் பார்க்க மாநில அமைச்சர் உதயன் குஹா மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
வாக்காளர்களை மிரட்டுவதாகவும், வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு வரவிடாமல் தடுப்பதாகவும், பூத் ஏஜெண்டுகளைத் தாக்கியதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். கூச் பெஹாரில் உள்ள டூஃபங்கஞ்ச் மற்றும் ஜல்பைகுரியில் உள்ள டப்கிராம் – ஃபுல்பாரி போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக தேர்தல் அலுவலகங்கள் தீவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.