மு.க.ஸ்டாலின்: மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்க வேண்டிய கட்டாயத்திலே இருக்கிறோம்..!

இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை பாதுகாக்கவும் மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிக சரியான முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்திலே நாம் இருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபையில் மும்மொழிக் கொள்கை கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றுள்ளதாக செய்தி வந்துள்ளது. டெல்லிக்கு சென்று யாரை சந்திக்கிறாரோ அவரிடம் இருமொழி கொள்கை குறித்து வலியுறுத்த வேண்டும். மும்மொழிக் கொள்கை குறித்து அனைத்து உறுப்பினர்களும் தங்களது உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளனர்.

இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம். மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் எற்றுக் கொள்ள மாட்டோம். நிதி தரவில்லை என இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெரும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல. இது பண பிரச்னை அல்ல இன பிரச்னை. இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும். பணமே வேண்டாம் என தாய்மொழியை காப்போம். யார் எந்த மொழியை கற்பதிலும் தடையாக இருப்பதில்லை. தமிழை அழிக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது. 3-வது மொழியை அனுமதித்தால், அது நம்மை மென்று தின்றுவிடும் என்று வரலாறு உணர்த்துகிறது.

இந்தி மொழித் திணிப்பு மூலமாக, மாநில மொழிகளை அழிக்க, ஒரு இனத்தை ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றனர்.இதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மாநிலங்களை தங்களது கொத்தடிமை பகுதிகளாக நினைக்கின்றது மத்திய அரசு. இப்படி கொத்தடிமை பகுதிகளாக நினைப்பதால் மொழித் திணிப்புகள், நிதி அநீதிகள் செய்கின்றனர். எனவே இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை பாதுகாக்கவும் மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிக சரியான முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்திலே நாம் இருக்கிறோம். மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியைக் காக்க முடியும்; தமிழினத்தை உயர்த்த முடியும் என்பதை தெரிவித்து அதற்காக அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்று அறிவிக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.