தந்தை பெரியார் அடிக்கடி ஒன்றைச் சொல்வார், “என்னை செயல்பட வைப்பது, என்னுடைய தோழர்கள் அல்ல; என்னுடைய எதிரிகள்” என்று சொல்வார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் திமுக சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்த மாநாட்டின் முக்கியமான நிகழ்ச்சியாக, மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சருமான கபில் சிபல், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி – மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் ஆகியோரைக் கொண்ட, “ஒரே நாடு ஒரு தேர்தல்” என்ற கலந்துரையாடல் ஏற்பாடு செய்து, அவர்களும் தங்களுடைய வாதங்களை அழுத்தமாக வைத்திருக்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் மிகத் தேவையான உரையாடல் இது.
இந்த மாநாடு வாயிலாக, நான் அனைவருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜகவை பொறுத்த வரைக்கும், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே உடை, ஒரே உணவு என்று ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்த பார்க்கிறது. அதற்காகத்தான் ஒரே தேர்தல் என்று கிளம்பி இருக்கிறார்கள். ஒரே அரசு என்ற நிலையை உருவாக்க மாநிலங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்.
பாஜகவைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் குறுகிய கால செயல் திட்டமாக இருக்காது. நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும். இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல்தான் என்று சொல்லும் நிலைமையை உருவாக்க நினைக்கிறார்கள். இது ஒற்றையாட்சிக்குதான் வழிவகுக்கும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இது, தனிமனிதர் ஒருவரிடம்தான் அதிகாரத்தைக் கொண்டு சென்று சேர்க்கும்.
இது, பாஜக என்ற கட்சிக்கே கூட நல்லதல்ல. இன்றைக்கு பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியைச் சர்வாதிகாரியாக ஆக்கத்தான் இந்தச் சட்டம் பயன்படும். பாஜகவும், பாஜகவுக்கு மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகளும் விரிக்கும் வலையில், இன்று அரசியல் காரணங்களுக்காக பாஜகவை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் விழுந்துவிடக் கூடாது. இந்தச் சட்டத்தை ஆதரிக்கக் கூடாது என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கோரிக்கை வைக்கிறேன். பாஜக ஆட்சியை ஆதரிப்பது, உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால், இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலுக்கே முரணான சட்டங்களை, மக்களாட்சி மேல் நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசியல் அமைப்புகளும் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஒரு திட்டத்தை அறிவித்தபோது, நம்மைப் போன்ற அரசியல் இயக்கங்களைக் கடந்து, வெளியில் இருந்து எதிர்த்தவர், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் மரியாதைக்குரிய எஸ்.ஒய்.குரேஷி. “பல முறை தேர்தல்கள் நடத்துவதால், தேர்தல் செலவு அதிகமாகிறது” என்று பாஜக தரப்பு சொன்னபோது, “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால்தான் அதிகமான செலவாகும். தேர்தலுக்கான கருவிகளும், ஆட்களும், பாதுகாப்பும் ஒரே நேரத்தில் தேவைப்படுவதால் செலவு அதிகமாகத்தான் ஆகும்” என்று குரேஷி சரியாகச் சொன்னார்.
இந்தச் சூழலில், இந்திய அரசியலமைப்பை கூட்டாட்சிக் கருத்தியலைக் காக்க ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நாம் இறுதி வரை எதிர்த்தாக வேண்டும். ஏன் என்றால், நான் முன்பே சொன்னது போன்று, பாஜகவின் செயல் திட்டங்கள் நீண்ட காலத்துக்கானது. தங்களின் செயல் திட்டங்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு எதிரான கருத்துருவாக்கங்களை மெதுவாகச் சமூகத்தில் விதைப்பார்கள்.
அதற்கு துணையாகப் பல எடுபுடிகளை பேச வைப்பார்கள். தங்களின் கையில் இருக்கும் ஊடகங்களை வைத்தே பொய்ச் செய்திகளை பரப்புவார்கள். விவாதங்களைக் கட்டமைப்பார்கள். அளவில்லாத அவதூறுகளை அள்ளி இறைப்பார்கள். பச்சையான பொய்களால் கொச்சைப்படுத்துவார்கள். பாஜகவின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும். இதையெல்லாம் கடந்துதான் நாம் போராட வேண்டும்,வெற்றி பெற வேண்டும்.
இப்போது கூட, இந்திய நாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், மக்களாட்சியையும் காக்கத்தான் நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நம்மை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி . எந்த ஆளுநர்? மரபுப்படி, நிறைவாக பாடப்படும் நாட்டுப்பண் பாடலுக்குக்கூட நிற்காமல் வெளியேறிய ஆளுநர். இருந்தாலும், மத்திய அரசுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்பது, நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்று அவரை மாற்றிவிடாதீர்கள். அவர் பேசப் பேசத்தான் பாஜக அம்பலப்படுகிறது. திராவிடக் கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சென்று சேருகிறது.
மக்களுக்கும் மாநில சுயாட்சி முழக்கத்தின் நியாயங்கள் புரிகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இன்று முழுவதும் இந்த மாநாட்டில், நம்முடைய கட்சியினர் திராவிடவியல் குறித்து அழுத்தமாக உணர்வோடு பேசுவதற்கான தூண்டுகோலாக இருப்பவரும் நம்முடைய ஆளுநர்தான். தந்தை பெரியார் அடிக்கடி ஒன்றைச் சொல்வார், “என்னை செயல்பட வைப்பது, என்னுடைய தோழர்கள் அல்ல; என்னுடைய எதிரிகள்” என்று சொல்வார். அப்படிப்பட்ட கொள்கை எதிரிகளை பண்பாட்டு எதிரிகளைத்தான் நாம் இன்றைக்குப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
இன்றைய எதிரிகள் கருத்தியல் மோதலுக்கு தயாராக இல்லை. ஏன் என்றால், கருத்தியல் ரீதியாக பேசினால் அவர்களால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. அதனால்தான், அவதூறுகளை ஆயுதங்களாக எடுக்கிறார்கள். அந்த துரோகக் கூட்டத்தைத் துடைத்தெறிய வேண்டிய கடமை – சட்டப் போராளிகளான உங்களுக்கு இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காக்கும் கடமை நமக்கு இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித் தந்து பாதுகாக்கும் கடமையும் நமக்கு இருக்கிறது.
எனவே, இங்கிருக்கும் சட்டப் போராளிகளுக்கு நான் சொல்லிக் கொள்வது, நீங்கள் கொள்கைப் போராட்டத்திலும் உதவ வேண்டும்; தேர்தல் களத்திலும் உதவ வேண்டும். தேர்தல் நேரத்தில் உங்களுடைய ‘வார் ரூம்’ பணிகள் மகத்தானது, பாராட்டுக்குரியது. இந்த நேரத்திலும் அதை நினைத்து நான் மகிழ்கிறேன்.2019 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு உங்களுடைய பணிகளும் முக்கியக் காரணம். இந்த வெற்றிப் பயணம் 2026-லும் தொடர வேண்டும்.
2026 தேர்தல் வெற்றி என்பது, நம்முடைய திராவிட மாடல் ஆட்சிக்கு, மக்கள் அளிக்கப் போகும் மகத்தான அங்கீகாரமாக அமையப் போகிறது. திமுக ஆட்சி மீண்டும் அமைய இந்தியா முழுமைக்கும் திராவிடக் கோட்பாடுகளை வென்றெடுக்க திமுக சட்டத்துறை சளைக்காமல் சமரசம் இல்லாமல் உழைக்க வேண்டும். சட்டத்துறை சார்பில், வழக்கறிஞர்கள் நலனுக்காக இன்றைக்கு ஐந்து கோடி ரூபாய் கொடுத்திருக்கிறீர்கள். அதை ஆக்கபூர்வமான திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ள என்.ஆர்.இளங்கோவை ஒரு செயல் திட்டம் வகுக்கச் சொல்லி இருக்கிறேன். அதனடிப்படையில், அதற்கான அறிவிப்புகள் வரும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.