முன்னாள் அமைச்சர் தங்கமணி பரபரப்பு பேட்டி

அ.தி.மு.க. தலைமை செயலாளர் பி. தங்கமணி நாமக்கல்லில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,எருமப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் வருதராஜ் கொரோனாவால் இறந்தார், அதையொட்டி ஒன்றியக்குழு தலைவர் பதவி காலியானது. காலியான ஒன்றிய தலைவர் பதவி புதிய தலைவர் நியமனம் செய்ய மறைமுக தேர்தல் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 15 பேரில் 10 பேர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் தி.மு.க.வினரின் மிரட்டலுக்கு பயந்து கோவிலுக்கு சென்று விட்டனர். ஆனால் அவர்களை நான் கடத்தி சென்று விட்டதாக பொதுமக்கள் போர்வையில் கொடுக்கப்பட்ட மனுவில் என் மீது வழக்கு போட்டு தேர்தலை ரத்து செய்துள்ளனர். இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கேட்டேன். அவர், மனுவை பரிசீலனை செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறினார்.

நான் சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் நாமக்கல்லுக்கு வந்தேன். அப்படி இருக்கும் போது நான் எப்படி ஒன்றியக்குழு உறுப்பினர்களை கடத்தி இருக்க முடியும். எப்போது ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். என் மீது புகார் அளித்தவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன் என தெரிவித்தார்.