மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சசிக்குமார். இவர், கட்சிக்கும், பெண்களுக்கும் அவப்பெயர் ஏற்படுத்துவதாக மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி நகரின் முக்கிய பகுதிகளிலும், திருமங்கலம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும், அந்த கட்சியினரே போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதில்,‘கண்டிக்கின்றோம்… கண்டிக்கின்றோம். பெண்களை தெய்வமாக மதிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும், பெண்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்திய மதுரை மாவட்ட தலைவர் ஆர்.சசிக்குமாரை வன்மையாகக் கண்டிக்கிறோம். மாநில தலைமையே… உடனடியாக பதவி நீக்க நடவடிக்கை எடு… தூண்டாதே, தூண்டாதே போராட தூண்டாதே – இவண் உசிலை பாரதிய ஜனதா கட்சியை நேசிக்கும் உண்மையான பெண் தொண்டர்கள்’’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டு போஸ்டர்கள் ஒட்டுபட்டு இருந்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக சசிக்குமார் மனைவி செல்வி, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், ‘‘எனக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகிறது. இரு மகன்கள் உள்ளனர். கணவருக்கும், மற்றொரு பெண்ணுக்கும் தொடர்பிருப்பதை 6 மாதம் முன்பு தெரிந்து கொண்டேன்.
அந்த பெண்ணும் கட்சி நிர்வாகி. போனில் இருவரும் பேசிய ஆடியோவை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அழைத்து பேசி பிரச்னையை முடித்து வையுங்கள்’’ எனத் தெரிவித்திருந்தார். இதன்பேரில் காவல்துறை, சசிகுமாரை அழைத்து விசாரணை நடத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.