பேராசிரியர் அன்பழகனை நேர்ல பார்க்குற மாதிரியே.. சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறப்பு

“பேரறிஞர் அண்ணா அவர்களால் “பேராசிரியர் தம்பி” என்று அன்போடும். இனமான பேராசிரியர்’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பெருமிதத்தோடு அழைத்துப் போற்றப்பட்டவர் பேராசிரியர் க. அன்பழகனார் அவர்கள். பள்ளிப் பருவத்திலேயே தமிழ் மொழியின் மீது தணியாத தாகம் கொண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தார்.

பேராசிரியர் அன்பழகன் அவர்கள், பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற நாட்களிலும், துணைப் பேராசிரியாக பணியாற்றிய காலங்களிலும் திராவிட இயக்கத்தின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டு. பொது வாழ்க்கையில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். 1962 -ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1967 ஆண்டு தொடங்கி 1971 -ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தொடர்ந்த 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில் மக்கள் நல்வாழ்வு. சமூக நலத்துறை, நிதி மற்றும் கல்வித் துறை அமைச்சராக, தான் அமைச்சராக பதவி வகித்த துறைகளில் எல்லாம் தனது முதிர்ந்த அனுபவத்தாலும், பரந்த தொலைநோக்குப் பார்வையாலும் பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தினார்.

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் கடந்த 30.11.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் பள்ளிக்கல்வி துறை வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனார் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் “பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகம்” என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், கடந்த 19.12.2022 அன்று சென்னை. நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக் கல்வி துறை வளாகத்தில் நடைபெற்ற பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில், அவ்வளாகத்திற்கு “பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகம்” எனப் பெயர் சூட்டி. பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவினையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் சென்னை. நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித் துறையின் பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து, அச்சிலை அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.