நடன இயக்குநரும் நடிகையுமான காயத்ரி ரகுராமன் அவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதன் பின்னர் 2015-ல், தமிழ்நாடு பாஜகவின் கலை பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டு 2020-ல் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்ட காயத்ரி ரகுராம், பாஜவின் கொள்கைகளையும், பிரதமர் மோடியின் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், மோடியின் திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பதிலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு மீன்வளம், கால்நடை, பால்வளம், தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சராக பதவியேற்றதை அடுத்து இனி தமிழ்நாட்டின் பாஜக தலைவர் பதவிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது, அடுத்த பாஜக மாநில தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற ரேஸில் காயத்ரி ரகுராம் பெயரும் அடிபட்ட ஆனால், அண்ணாமலை மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தனது அணியில் இருந்த பெப்சி சிவாவுக்கு எதிராக காயத்ரி ரகுராம் புகார் கூறிய நிலையில், காயத்ரி ரகுராம் பதவியில் பெப்சி சிவா நியமிக்கப்பட்டு, காயத்ரி ரகுராம், அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக மாற்றப்பட்டார். இதனால் அண்ணாமலை – காயத்ரி ரகுராம் இடையே உரசல் அதிகரித்தது. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராமை விமர்சித்து வந்தனர். பதிலுக்கு காயத்ரி ரகுராம் ட்விட்டரில் அவர்களை விமர்சனம் செய்தார். அண்ணாமலையின் வார் ரூம் ஆட்கள் தன்னை குறி வைத்து சமூக வலைதளத்தில் அட்டாக் செய்வதாக கூறினார்.
இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து 6 மாதம் வரை சஸ்பெண்ட் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக உத்தரவிட்டார். அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து காயத்ரி ரகுராம் விலகினார். இந்தச் சூழ்நிலையில் காயத்ரி ரகுராம் 10 ஆண்டு கால அரசியல் பயணத்தில் அதிமுக அவரது இரண்டாவது கட்சியாக கடந்த ஜனவரி 19 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் காயத்ரி ரகுராம் எக்ஸ் தளத்தில், புரட்சி தலைவி ஜெ ஜெ அம்மா தேசிய ஜனநாயக கூட்டணி ஆரம்பித்தால், மோடி ஜி அதை அவரது என ஸ்டிக்கர் ஒட்டுகிறார். அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் அ.தி.மு.க.வுக்கு அவர்கள் அதை திரும்ப கொடுக்க வேண்டும். மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடியார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும், பாஜக அல்ல. பாஜக தனது கூட்டணியை தேசிய சர்வாதிகாரி கை முறுக்கு கூட்டணி என்று பெயர் மாற்ற வேண்டும் என பாஜகவை கடுமையாக விமர்சித்து உள்ளார்.