புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், அதிமுக, பாமக எம்எல்ஏ.க்களுடன் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தருமபுரி ஒன்றியம் நாயக்கனஅள்ளி மற்றும் குப்பூர் ஊராட்சி களைச் சேர்ந்த மக்கள், தருமபுரி பாமக எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், ஏழை, எளிய தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள் உள்ளிட் டோர் எங்கள் பகுதி ஊராட்சிகளில் அதிகம் வசிக்கின்றனர்.
தினமும் கிடைக்கும் வருமானத்தின் மூலமே இந்த குடும்பங்கள் வாழ்கின்றன. இந்தச்சூழலில், குப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தன் கொட்டாய் கிராமத்தில் ஓராண்டுக்கு முன்பு டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண் டனர். அதற்கு கிராம மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், கடத்தூர் பகுதியில் இயங்கும் கடைக்கு அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தக் கடையை சித்தன் கொட்டாய் பகுதிக்கு இடம் மாற்ற தற்போது அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பல குடும்பங்களின் வாழ்வு சீரழியும். எனவே, குப்பூர் பகுதியில் டாஸ்மாக்கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.