எடுத்த நடவடிக்கையில் இரும்பு மனிதர் போல் உறுதியாக இருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர். அதேபோல் புதிய கல்விக் கொள்கையிலும் உறுதியாக இருப்பார் என பி.கே. சேகர்பாபு தெரிவித்தார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “ஒன்றிய அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாடு துணை முதலமைச்சர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றவுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளனர்.” என பி.கே சேகர்பாபு தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியே தீருவோம் என்ற தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு பி.கே சேகர்பாபு பதில் அளிததார். அப்போது, “தமிழ்நாட்டை வேறு கோணத்தில் பார்த்து விடாதீர்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஒன்றிணைந்து தமிழக முதல்வர் தலைமையில் வெகுண்டு எழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். எடுத்த நடவடிக்கையில் இரும்பு மனிதர் போல் உறுதியாக இருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர். அதேபோல் புதிய கல்விக் கொள்கையிலும் உறுதியாக இருப்பார்.” என பி.கே சேகர்பாபு தெரிவித்தார்.