நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தி.நகரில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்.
தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தியாகராய நகர் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரையிலான பாண்டி பஜார் சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு ‘ரோடு ஷோ’ மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார். வழியின் இருபுறங்களிலும் ஏராளமான பாஜக தொண்டர்கள், பிரதமர் மோடிக்கு மலர்களைத் தூவி வாழ்த்தி வரவேற்றனர்.