பாலகிருஷ்ணன்: கூட்டணிக்காக எல்லா பக்கமும் பேரம் பேசும் அரசியல் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது..!

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘மக்களவை தேர்தல் பணியை துவக்கியுள்ளோம். தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணியிட்டு போட்டியிட்டாலும், தனித்து நின்றாலும் அவர்களை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தோற்கடிக்கும். பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுவதைபோல் 300, 400 இடங்களை பிடிப்போம் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு இடத்தில்கூட டெபாசிட் வாங்க முடியாது.

மேலும் சென்னை, தூத்துக்குடியில் மழை, புயல் சேதம் ஏற்பட்டபோது தமிழக அரசு கேட்ட ரூ.37,000 கோடி நிவாரண நிதிக்கு ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை. தமிழகத்தில் 3 நாள் சுற்று பயணம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி கோயில்களுக்கு சென்றார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கி ஆறுதல், உதவி செய்யவில்லை. தமிழகத்தை வஞ்சித்து, துரோகம் செய்ததற்கு நிச்சயம் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். யாராவது வருவார்களா என்று அதிமுகவினர் கடைவிரித்து உட்கார்ந்திருக்கிறார்கள். கூட்டணிக்காக எல்லா பக்கமும் பேரம் பேசும் அரசியல் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது’ என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.