பாஜகவுக்கு தைரியம் இருந்தால் நிலத்தின் ஆவணங்களை காண்பிக்கட்டும்..! நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்…!

ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பய் சோரன் பதவியேற்றதை அடுத்து, அம்மாநில சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரசுக்கு ஆதரவாக மற்றும் எதிராக உள்ளவர்கள் எழுந்து நிற்க சொல்லி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆளும் ஜேஎம்எம் கூட்டணிக்கு 47 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளதாக கூறி நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்பாய் சோரன் அரசு வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன் ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன்மீது விவாதம் நிகழ்த்தப்பட்டது. இதில் பேசிய ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், “ஜனவரி 31 இரவு, நாட்டிலேயே முதல்முறையாக ஒரு மாநில முதலமைச்சர் கைது செய்யப்பட்டார். எனது கைது சம்பவத்தில் ஆளுநர் மாளிகைக்கு தொடர்பு உள்ளதாக நான் நினைக்கிறேன்.

நான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31-ம் தேதி, இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாக நினைவு கூரப்படும். என் மீதான குற்றச்சாட்டை முடிந்தால் நிரூபித்துக் காண்பிக்க வேண்டும். பாஜகவுக்கு தைரியம் இருந்தால் என் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தின் ஆவணங்களை காண்பிக்கட்டும்.., சவால் விடுக்கிறேன்…, அப்படி நிரூபித்துவிட்டால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஆம், என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கொடுத்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார். ஜார்கண்டில் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது. பழங்குடியினரை மத்திய அரசு ஏன் இவ்வளவு வெறுக்கிறது என்பது தெரியவில்லை” என ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.