நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில்,மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேயனை ஆதரித்து பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இது தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக இல்லாமல், வெற்றி விழா கூட்டம் போல் மக்கள் வெள்ளம் காட்சியளிக்கிறது. இங்கு கூடியிருக்கும் மக்களின் எழுச்சியில் இருந்து அதிமுக வேட்பாளரின் வெற்றியைப் பார்க்க முடிகிறது. அதிமுக ஒரு வலிமையான இயக்கம்.
புதிதாக ஒரு தலைவர் பாஜகவில் வந்திருக்கிறார். அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பேட்டிக் கொடுப்பார். விமானத்தில் இருந்து இறங்கிய பிறகு பேட்டிக்க கொடுப்பார். பேட்டிக் கொடுப்பதுதான் அவருடைய வேலை. பேட்டிக் கொடுத்தே தலைவர் பதவியில் இருக்கப் பார்க்கிறார். பொதுவாக கட்சித் தலைவர்கள் பல வழிகளில் மக்களைச் சந்திப்பார்கள். ஆனால், பாஜக தலைவர், அவ்வப்போது பேட்டிக் கொடுத்து மக்களை நம்ப வைத்து, வாக்குகளைப் பெற முயற்சிக்கிறார்.
அது ஒன்றும் தமிழக மக்களிடத்தில் எடுபடாது. தமிழகத்தில் உழைப்பவர்களுக்குத்தான் மரியாதை. உழைக்கும் கட்சி அதிமுக. மக்களுக்கு நன்மை செய்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம். எனவே, அவர் எவ்வளவு பேட்டிகள் கொடுத்தாலும், ஒன்றும் எடுபடப் போவது இல்லை. ஏன் நான் நினைத்தால், பேட்டிக் கொடுக்க முடியாதா? பேட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். அதனால், நாட்டு மக்களுக்கு என்ன பயன்? எப்போது எதைச் சொல்ல வேண்டுமோ, அப்போது அதைச் சொன்னால், அது மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆனால், அவர் எல்லாவற்றுக்கும் பேட்டி கொடுக்கிறார்.
நாட்டில் எத்தனையோ தலைவர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், மறைந்து போகிறார்கள். ஆனால், மக்கள் மனதிலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிமுகவின் தலைவர்கள். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இன்றளவும் மக்கள் மனதில் வாழ காரணம், அவர்கள் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்தனர். எனவே, அந்த தலைவரைப் போல எத்தனை தலைவர்கள் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.
இப்போது மத்தியில் இருந்து தமிழகத்துக்கு அடிக்கடி வந்து போகின்றனர். அதனால், என்ன பிரயோஜனம்? மத்தியில் இருந்து இங்கு வருபவர்கள், ஏதாவது திட்டத்தைக் கொண்டுவந்து, அதன்மூலம் மக்கள் பயன் அடைந்திருந்தால், அது பிரயோஜனமாக இருக்கும். ஆனால், அதைவிட்டுவிட்டு, விமானத்தில் இருந்து இறங்குகின்றனர். ரோட்டில் செல்கின்றனர். அத்துடன் கதை முடிந்து போய்விட்டது. மக்கள் வாக்களித்து விடுவார்களா? தமிழக மக்கள் என்ன சாதரணமானவர்களா? அறிவுத்திறன் படைத்தவர்கள்.
சரி, தவறு எது என்று எடைபோட்டு பார்த்து தீர்ப்பளிக்கக் கூடியவர்கள் தமிழக மக்கள். எனவே, இந்த ஏமாற்று வேலை எல்லாம் தமிழகத்தில் எடுபடாது. நாங்கள் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்து, சிறப்பான ஆட்சி நடத்தி பல்வேறு திட்டங்களைக் கொண்டு நிறைவேற்றி, மக்கள் எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுள்ளனர். இந்தச் சூழலில், யார் யாரோ வந்து, ஏதேதோ பேசி, மக்களை குழப்பி அந்த குழப்பத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். அதெல்லாம் ஒருபோதும் தமிழகத்தில் நடக்காது” என பழனிசாமி பேசினார்.