3-வது குழந்தை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு சலுகைகள் அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில், திமுக MLA பர்கூர் மதியழகன் கோரிக்கை அளித்தார். தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பிறகு இரு பட்ஜெட் மீதான விவாதம் 5 நாட்கள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மார்ச் 24-ந் தேதி முதல் சட்டசபைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப் பட்டு அதன் மீது விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து இருந்தார்.
இந்நிலையில், திமுக MLA பர்கூர் மதியழகன் பேசுகையில், முதல்வர் மு.க ஸ்டாலினின் நிர்வாகத் திறமையால், தமிழ்நாட்டின் பொருளாதாரம் நிர்ணயித்த இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி சென்று கொண்டு இருக்கிறது. தொழில் முதலீடுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதற்கு ஏற்ற வகையில், தொழில் துறைக்கு தேவையான திறன் படைத்த மனித வளத்தை உருவாக்குவது நமது கடமையாகிறது. உதாரணத்திற்கு, இந்திய சுதந்திரத்தின்போது தமிழ்நாடு மற்றும் பீகாரின் மக்கள்தொகை சமமாக இருந்தது.
தற்போது பீகாரின் மக்கள் தொகை 13.5 கோடியாக உள்ளது. ஆகையினால், மனித வளத் தேவைக்கு பிற மாநிலங்களைச் சார்ந்து இருக்க வேண்டியதாக உள்ளது. தமிழகத்தின் எதிர்கால நலனையும், தொகுதி மறு சீரமைப்பு போன்ற விவகாரங்களுக்கும் தீர்வு காணும் வகையில், இரண்டு குழந்தைகள் போதும் என்ற கொள்கையை மாற்றி, மூன்றாவது குழந்தைக்கு அதிக சலுகைகள் அறிவித்து ஊக்குவிக்க வேண்டும்” என பர்கூர் மதியழகன் தெரிவித்தார்.
மேலும் பர்கூர் மதியழகன் பேசுகையில், தொகுதி மறுசீரமைப்பை மக்கள் தொகை அடிப்படையில் எடுத்தால் தென் மாநிலங்களில் தொகுதிகள் குறையும் அபாயம் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் உள்பட தென் மாநில முதல்வர்கள் கூறி வருகிறார்கள். மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக பின்பற்றியதால் மக்களவை தொகுதிகள் மறுவரையறையில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன.
முதல்வர் ஸ்டாலின் கூட சமீப காலமாக பேசும் போது, குழந்தைகளை அதிகம் பெற்றுக்கொள்ளுங்கள் என பொருள்படும் விதமாகவே பேசி வருகிறார். கடந்த ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பதினாறு பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லக் கூடிய நிலைதான் இப்போது வந்திருக்கிறது” எனக் கூறினார். முன்னதாக கடந்த ஆண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இத்தகைய கருத்தை முன்வைத்தார். சந்திரபாபு நாயுடு பேசுகையில், “முன்னர் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இனி அப்படி இல்லை. 2 குழந்தைகளுக்கும் அதிகமாக பெற்ற தம்பதியினர் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடலாம்.
அப்படி அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் கவுன்சிலர்களாக, மேயர்களாக பதவியைப் பெறவும் முடியும். வட இந்தியாவில் குடும்ப கட்டுப்பாட்டு விகிதம் நிலையானதாக இருக்கிறது. ஒரு குழந்தையைப் பெறுகிற நிலைமைகூட தற்போது மாறி வருகிறது. இருவரும் சம்பாதித்தாலும் குழந்தையே தேவை இல்லை என்கிற முடிவிலும் சில தம்பதிகள் இருக்கின்றனர். இது மக்கள் தொகையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இப்படி செய்ததால் பணிகளுக்கு நாம் செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது. நமது நாட்டிலும் அப்படியான ஒரு நிலைமை வந்துவிடக் கூடாது” என பர்கூர் மதியழகன் தெரிவித்தார்.