சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணி அளவில் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் புறப்படும். இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்நிலையில், இந்த ரயிலில் நெல்லைக்கு பல கோடி ரூபாய் பணத்தை கொண்டு செல்ல சிலர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைக்க தகவலின் பேரில் விரைந்த தாம்பரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்ல முயன்ற ரூ .4 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ் உள்ளிட்ட 3 பேர் இதில் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் வெளியாகி உள்ளது. நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள் பணத்தை எடுத்துச் சென்று உள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் விருகம்பாக்கம் காவல்துறை சோதனை மேற்கொண்டனர்.