தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. 2016 -ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட நீட் எனப்படும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு எதிராக பாஜகவை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முந்தைய அதிமுக ஆட்சியிலும், தற்போதைய திமுக ஆட்சியிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
தற்போது திமுக அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் சாதித்த மாணவர்கள், பெற்றோருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடிய நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் சேலத்தை சேர்ந்த மாணவியின் தந்தை நீட் தேர்வு பயிற்சிக்காக தனது மகளுக்கு 20 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும், வசதி இருக்கும் தன்னால் அந்த செலவை செய்ய முடிந்தது.
அதேவேளையில் மருத்துவக் கல்வி கனவுடன் இருக்கும் மாணவர்களின் வசதியில்லாத பெற்றோர்களால் அதனை செய்ய முடியுமா? எப்போது நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திடுவீர்கள் என்று அம்மாசியப்பன் கேட்க, இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத ஆளுநர் மாளிகை அதிகாரிகள் அந்த பெற்றோரிடமிருந்து மைக்கை வலுக்கட்டாயமாக பறித்துள்ளனர். இதற்கு பதிலளித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒருபோதும் தான் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என தெரிவித்தார்.