சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழக பாஜக பணிகளை கண்காணிப்பது தொடர்பாக கட்சித்தலைமை முடிவு செய்து ஒருங்கிணைப்பு குழுவை அமைத்திருக்கிறது. அதில் எனது பெயர் இடம்பெறவில்லை. தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கேட்டு அறிவதற்காக அந்த குழு தலைவர் டெல்லி சென்றுள்ளார்.
விஜயதரணி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவுக்கு வந்துள்ளார். ஆகையால் அவருக்கு பாஜக வில் ஏதாவது ஒரு பதவி கொடுத்திருக்க வேண்டும். அதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் வருத்தப்பட வேண்டாம். வரும் காலத்தில் அவருக்கு உரிய பதவி கொடுக்கப்படும். கட்சியில் எனக்கும் பதவி இல்லை. அதிமுகவில் பல உயர்ந்த பதவிகளில் இருந்து விட்டு பாஜகவுக்கு வந்தேன். பின்னர் மாநில துணைத்தலைவர் பதவி கொடுத்தார்கள். தற்போது சட்டமன்ற குழு தலைவராக மட்டும் இருக்கிறேன். அதிமுக, பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.