தொல். திருமாவளவன்: மாணவர்களை வீட்டுக்கு அனுப்புவதே மோடியின் நோக்கம்

மாணவர்களைப் பள்ளிப் படிப்பின் போதே வீட்டுக்கு அனுப்பி இடைநிற்றலின் சதவீதத்தை உயர்த்துவது தான் மோடி அரசின் நோக்கம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தொல்.திருமாவளவன் பதிலளித்தார்.

அப்போது, “புதிய கல்விக் கொள்கையின் மூலம் CBSE பாடத்திட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்குப் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவேதான், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும், அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் “100% தேர்ச்சி” என்று அறிவிக்கிற, அதாவது, “All Pass முறை” நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், இப்போது மாணவர்கள் தேர்ச்சிப் பெறுவதற்கு குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்கள் (30%) எடுக்க வேண்டும் என்று ‘தேசிய கல்விக் கொள்கை’ வலியுறுத்துகிறது.

மாணவர்களைப் பள்ளிப் படிப்பின் போதே வீட்டுக்கு அனுப்பி இடைநிற்றலின் சதவீதத்தை (Drop-out Percentage) உயர்த்துவது தான் இந்த தேசிய கல்விக் கொள்கையை வகுத்தவர்களின் நோக்கமாகும்; மோடி அரசின் நோக்கமாகும். முடிந்தவரை மாணவர்களைப் பள்ளிப் படிப்பிலேயே வடிகட்டிவிடுவது, அதன்மூலம் அவர்களின் அவரவரின் குலத்தொழிலுக்கு அனுப்புவது என்பது தான் அவர்களின் உள் நோக்கம். அதனால்தான் தேசிய கல்விக் கொள்கையைக் கட்டாயமாக்கித் திணிக்கிறார்கள்.

இந்நிலையில் தான், தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசும் வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. ஆகவேதான் இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாட்டுக்குக் கல்விக்கென நிதி ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி தருகிறார்கள். ஜனநாயக சக்திகள் இதனைப் புரிந்து கொண்டு தேசிய அளவில் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

பன்னிரண்டாம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வு இருந்தால் போதும் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்து. 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு என தொடர்ந்து அடுத்தடுத்துப் பொதுத் தேர்வுகளை வைத்து வடிகட்டி மாணவர்களை வீட்டுக்கு அனுப்புகிற வேலையை ஃபாசிச பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்கிறோம் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.