பீகாரின் முங்கர் மாவட்டம், ஜமால்பூரின் ஃபரியாத்பூர் பகுதியில் அமைந்துள்ள நிர்மலா இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பப்ளிக் பள்ளியில் கடந்த 16-ம் தேதி இரவு 10 மணியளவில் இந்த கொடூரம் நடைபெற்றுள்ளது. 12 வயதே ஆன மேத்யூ ராஜன் என்ற மாணவர் அன்றிரவு தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பள்ளி முதல்வர் ராம்நாத் மண்டல் அங்கு வந்துள்ளார். மாணவர் அருகில் வந்த அவர், திடீரென மாணவரைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளார்.
அத்துடன் விடாமல், மாணவரின் மார்பிலேயே ஏறி நிற்கிறார். அவர் செய்த செயலால் மேத்யூ கத்த ஆரம்பித்துவிட்டார். அருகில் இருந்த மாணவர்களும் இந்த கொடூரத்தைப் பார்த்து மிரண்டு போய் எழுந்து உட்கார்ந்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு மேத்யூவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. தனக்கு நேர்ந்த இந்த மோசமான சம்பவத்தை அந்த மாணவர் அவரது பெற்றோரிடம் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூரம் அத்தனையும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. இதையடுத்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேத்யூவின் தந்தை ரமேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் ராம்நாத் மற்றும் அவரது மனைவி நிர்மலா தேவி ஆகியோரை காவல்துறை கைது செய்தனர்.