தென்காசி மாவட்ட திமுகவை நிர்வாக வசதிக்காக தெற்கு, வடக்கு என இரண்டாக பிரித்துள்ளது கட்சித் தலைமை. அதன்படி தென்காசி தெற்கு மாவட்ட திமுகவுக்கு சிவபத்மநாதன் மாவட்டச் செயலாளராக உள்ளார். தென்காசி வடக்கு மாவட்ட திமுகவுக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜா மாவட்டச் செயலாளராக உள்ளார்.
ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்ட நிலையில் இப்போது இரு வேறு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து தென்காசி மாவட்ட மகளிரணி சார்பில் நேற்றைய தினம் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, திமுக மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதனை ஓபன் மைக்கிலேயே கேள்விகணைகளால் துளைத்தெடுத்து சண்டையிட்டார் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி.
அவர் தனது ஆதங்கத்தை கொட்டியதை கூட திமுக தலைமை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், ஆனால் பொதுவெளியில் மேடை போட்டு ஓபன் மைக்கிலேயே, ”மணிப்பூர் இருக்கட்டும், இங்க பெண்களுக்கு என்ன பாதுகாப்பு” என உட்கட்சி பிரச்சனையுடன் பெண்கள் பாதுகாப்பை முடிச்சு போட்டு பேசியது தான் கட்சி தலைமையை கோபம் கொள்ளச் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் நடந்த நிகழ்வின் பின்னணியிலும், தமிழ்ச்செல்வி இவ்வாறு பேசியதன் பின்னணியிலும் ராஜா எம்.எல்.ஏ. இருப்பதாக சிவபத்மநாதன் தரப்பு சந்தேக்கிறது.
இதனிடையே இது குறித்து அனைத்து விவரங்களும் அன்பகம் கலைக்கு சென்றுவிட்டதாகவும் அவர் உரிய விசாரணை நடத்தி விரைவில் கோஷ்டிப்பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.