ஜெயலலிதாவின் பணத்தை வைத்து சசிகலா, டிடிவி.தினகரன் என ஆயிரம் குடும்பங்கள் கோடீஸ்வரர்களாகி விட்டனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசி தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உதவியாக வந்தவர்கள்தான் சசிகலா, டிடிவி.தினகரன் உள்ளிட்டோர். ஆனால், அவர்கள், அவர்களைச் சேர்ந்தவர்கள் என ஆயிரம் குடும்பத்தினர் ஜெயலலிதாவின் பணத்தை வைத்து கோடீஸ்வரர்களாகி விட்டார்கள். அந்தப் பணத்தை வைத்துக்கொண்டுதான் சசிகலா, தினகரன் ஆகியோர் ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறி வருகின்றனர் என இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.