தாமரை மலர வாய்ப்பில்லை…. வீண் கர்வம் பிடித்தவர்களால் தாமரை வாடி கருகி போகும்..!

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னமும் ஒரு சில ஆண்டுகள் இருக்கும் நிலையில் பாஜக தமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெறுவது மட்டுமல்லாது எப்படியாவது திமுகவுடன் கூட்டணி வைத்து கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தினமும் மக்களின் மனதில் இருக்க நல்லதோ, கொட்டதோ ஏதாவது செய்து தினம் தினம் பத்திரிகையில் செய்திகள் வெளிவர செய்து கொண்டுள்ளது.

அதனால் தமிழகத்தில் திமுக- பாஜக இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில் திமுக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து வருகிறார். மேலும் திமுக நிர்வாகிகளை பாஜகவிற்கு இழுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பாஜகவிற்கு திமுகவும் தக்க பதிலடி கொடுத்து மட்டுமல்லாமல் பாஜக நிர்வாகிகளை திமுக இழுத்து வருகிறது. கடந்த வாரம் மதுரை மாநகர மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகி, திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜக பொறுப்பிலிருந்த மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி வினோ திமுகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளளார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள திமுக கூட்டத்தில் மாற்று கட்சியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்பார்வையில் இணைய இருப்பதாக அரசால் புரசலாக பேசப்படுகிறது.

இந்நிலையில் பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி வினோ திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாக, இதனையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் மைதிலி வினோவை கட்சியில் இருந்து நீக்குவதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பிற்கு பதில் அளித்து தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்ட மைதிலி வினோ, பாரதீய ஜனதா கட்சியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பினராக இணைந்து கடின உழைப்பால் மாவட்ட மகளிரணி, மாநில மகளிரணி என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி வந்த நான் அண்மை காலமாக பாஜகவின் மாவட்ட தலைமையின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் கட்சியிலிருந்து விலகும் முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

பாஜக என்றால் மக்களுக்கு என்னவென்றே தெரியாத காலகட்டத்தில் கட்சிக்காக பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்தி கட்சியில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோரை இணைத்து கோவையில் பாஜக வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் பாடுபட்டுள்ளேன் என்பது உண்மையான பாஜகவினருக்கு நன்றாக தெரியும் என கூறியுள்ளார். மேலும் பாஜகவில் பெண்கள் யாருமே இல்லாத காலகட்டத்தில் மகளிரணியை கட்டமைத்தவர்களில் எனது பங்கு அலாதி என்பது தாங்கள் அறியாததே என கூறியுள்ளார்.

பாஜகவிற்கு வந்த உடன் மாவட்ட தலைவர் பதவியை பிடித்ததால் அடிப்படை என்ன என்பது தெரியாமல் இருப்பது நியாயம் தான். பாஜகவில் உழைப்பவருக்கு பதவி என்ற நிலை மாறி இன்று பணம் படைத்தவருக்கே பதவி என்ற நிலையல்லவா நிலவுகிறது. ரியல் எஸ்டேட் மூலம் சம்பாதித்த 310 கோடி ரூபாய் சொத்து இருப்பதால் நீங்கள் இன்று மாவட்ட தலைவர் என்றால், நாளை ஒருவர் 320 கோடி சொத்து வைத்திருந்தால் அவர் தான் அடுத்த மாவட்ட தலைவரா? இப்படி இருந்தால் கட்சிக்காக அடிப்படையிலிருந்து உழைத்தவர்கள் கதி என்னாவது? என்னை போன்ற உண்மை விசுவாசிகள் பலரும் தங்களது தவறான ஏதேச்சதிகார போக்கால் சுயமான முடிவெடுக்க துவங்கியுள்ளனர் என்பது தெரியுமா தங்களுக்கு? கட்சியின் மூத்த நிர்வாகிகளை அவமதித்து புறந்தள்ளி பணம் படைத்தவர்களுக்கு பதவி வழங்கும் தங்களை போன்றவர்கள் மாவட்ட தலைமை பொறுப்பில் உள்ள வரை இங்கு தாமரை மலர வாய்ப்பில்லை.

தாமரை மலர தண்ணீர் ஊற்றியவர்கள் பலரும் இன்று தங்களின் செயல்பாட்டால், தொண்டர்களுக்கும் உண்மை விசுவாசிகளுக்கும் மதிப்பளிக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு செல்ல தயாராகி விட்டனர். எனவே மொட்டு வந்து மலர இருந்த தாமரை தங்களை போன்ற வீண் கர்வம் பிடித்தவர்களால் வாடி கருகி போகும் என்பது தான் நிதர்சனம்” எனத் தெரிவித்துள்ளார்.

மைதிலி வினோவின் குற்றச்சாட்டு பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோவையில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சுற்றுபயணம் செய்து வரும் நிலையில், மைதிலி வினோ பொள்ளாச்சியில் நடைபெறும் விழாவில் திமுகவில் இணைவதுடன் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.