தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி இன்று முதல் திமுகவில் பயணம்

தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகுவதாக வைஷ்ணவி இன்று முதல் செந்தில் பாலாஜி முன்னிலையில் மக்கள் பணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழியில் தொடர உள்ளார் கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான வைஷ்ணவி தொண்டு நிறுவனம் நடத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்துள்ளார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். பெண் என்பதால் கட்சி நிர்வாகிகள் தன்னை புறக்கணிப்பதாகவும், தகாத வார்த்தைகளால் பேசி நிர்வாகிகள் மிரட்டுவதாகவும் கூறி திடீரென தவெகவில் இருந்து முழுமையாக தன்னை விடுவித்துக் கொள்வதாக கூறி கட்சியில் இருந்து வைஷ்ணவி விலகினார்.

இந்நிலையில் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில், மக்கள் பணி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் இருப்பவர்கள் அதற்கான வாய்ப்புகளை வழங்கக்கூடிய உரிய அங்கீகாரத்தை வழங்கக்கூடிய கட்சி எது பாஜக என தெரிந்து கொண்டு சேர வேண்டும். அப்படிப்பட்ட கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி மக்கள் பணி செய்ய பாஜவில் இணைந்து செயலாற்றலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்து இருந்தார்.

மேலும், மதிமுகவின் இணையதள ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மக்கள் பணி என்றால் அது மதிமுக மட்டுமே என்றும் தலைவர் வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் இணைந்து பணியாற்றலாம் வாருங்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தனது தாயின் வழியில் வைஷ்ணவி 200க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் இன்று கோயம்புதூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வில் திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி மற்றும் மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.