அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக இருந்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை விளாங்குடி பகுதியில் எம்ஜிஆர் மன்றம் மற்றும் அதிமுக கொடியேற்றி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் செல்லூர் ராஜூ கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மதுரையில் அதிமுக கொடி ஏற்றுவதற்கு காவல்துறையினர் இடையூறு கொடுத்ததற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறை உருட்டல், மிரட்டல், அதிமுககாரனிடம் பருப்பு வேகாது, நாங்கள் பல்வேறு அடக்குமுறைகளை பார்த்து வந்தவர்கள். நாங்கள் காவல்துறையை கண்ணியமிக்கவர்களாக நடத்தி உள்ளோம். நாட்டில் சட்டம் ஒழுங்கு கேவலமாக உள்ளது.
தபால் தந்தி நகரில் நடைபயிற்சி சென்ற பெண்ணை ஒருவர் தடவி விட்டு செல்கிறார். ஆசிரியர் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது பள்ளிக்குள் சென்று வெட்டுகிறார்கள். உச்சநீதிமன்றம் இந்த திமுக அரசாங்கத்தை ஆட்சி நிர்வாகம் சரியில்லை என பலமுறை தலையில் கொட்டுகிறது. காவல்துறைக்கு கொஞ்சம் கூட வெட்கம், மானம், ரோஷம் எதுவும் இல்லை. மதுரையில் சித்திரை திருவிழாவில் மக்களுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை.
காவல்துறை எங்களை அடக்க நினைப்பது என்ன நியாயம், சாதுமிரண்டால் காடு கொள்ளாது, நாங்கள் கண்ணியமிக்கவர்கள். எங்கள் ஆட்சிக் காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக இருந்தது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் தலை விரித்து ஆடுகிறது, மெத்தனால் பல மாநிலங்களில் இருந்து வருகிறது, கள்ளச்சாராய சாவு வழக்கை நீதிமன்றமே சிபிஐ வசம் ஒப்படைத்துவிட்டது. அந்த அளவிற்கு தமிழக காவல்துறை மோசமாக செயல்படுகின்றனர் என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.