செல்லூர் ராஜு: கூமுட்டையாகத் தான் அண்ணாமலை இருக்கிறார்…!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

அதன்வரிசையில், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வேணுகோபால் வேட்பாளரை ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது, “1980இல் நடந்த விஷயங்களை எல்லாமே சம்பந்தமே இல்லாமல் திமுக இப்போது பேசி வருகிறார்கள். இந்தி- சமஸ்கிருதம், வடக்கு- தெற்கு எனப் பேசி வருகிறார்கள். அந்த பிஞ்சு போன செருப்பை அவர்கள் இன்னும் தூக்கி எறியவில்லை” என்று அவர் பேசினார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பலர் தங்கள் இன்னுயிரை ஈந்த நிலையில், அதைப் பிஞ்சு போன செருப்பு என அண்ணாமலை பேசியது சர்ச்சையானது. பல அரசியல் கட்சியினரும் ரும் அண்ணாமலை பேச்சைக் கடுமையாகச் சாடி வருகிறார்கள். இந்தச் சூழலில் அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளார். செய்தியாளர்களிடம் நல்ல சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தவர் அண்ணாமலையின் இந்த கருத்து குறித்துக் கேட்டதும் டென்ஷன் ஆனார்.

அப்போது, “அவரே ஒரு செருப்பு சமானம் தான். சுதந்திரப் போராட்டத்திற்கு ஈடான ஒரு போராட்டம். மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளைக் கொண்டது தான் தமிழ் இனம். தமிழருக்கு என்று தனியாக ஒரு குணம் இருக்கிறது. மொழிக்காகப் போராடி உயிர் நீத்த வரலாறு தமிழர்களுக்கு இருக்கிறது. என்ன காரணம் காங்கிரஸ் பேரியக்கத்தை வேரோடு வேராக அழித்து, 52 ஆண்டுகள் ஆட்சி இன்னும் தமிழகத்தில் அவர்கள் ஆட்சிக்கு வரவே முடியாத சூழல் தான் இருக்கிறது. தேசிய கட்சிக்கு அப்படியொரு நிலைமையை ஏற்படுத்தியதே தமிழர்கள் தான். அதைக் கொச்சைப்படுத்துகிறார் என்றால் அது அவரது குணம், தரம் ஆகியவற்றைக் காட்டுகிறது.

தம்பி அண்ணாமலை கிட்ட நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இந்தி படித்தவர்கள் அதிகம் பேர் ஏன் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வந்துள்ளனர். ஆனால் இங்கே தமிழும் ஆங்கிலமும் படித்தவர்கள் வெளிநாடுகளிலும் இஸ்ரோவிலும் இருக்கிறார்கள். பல உயர்ந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள். இதெல்லாம் அண்ணாமலைக்குத் தெரிய வேணாமா. இது கூட தெரியாத கூமுட்டையாகத் தான் அண்ணாமலை இருக்கிறார். அப்படி தான் அவரை பார்க்க வேண்டும்” என செல்லூர் ராஜு தெரிவித்தார்.