ஒன்று, இரண்டு கோடி மக்களுக்கு தனி நாடு இருக்கும்போது, 11 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் மக்கள் ஏன் தனி நாடு கேட்கக்கூடாது என சீமான் தெரிவித்தார். கோயம்புத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில், மே 18 மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசுகையில், “நாம் வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட மக்கள். சொந்த மண்ணிலேயே தாய் நிலத்திலேயே நாம் தமிழர்கள் என்ற உணர்வின்றிப் பிளவுண்டு இருந்தோம். போராடித்தான் ஆக வேண்டும் என்று தள்ளப்பட்ட மக்கள் நாம். இந்த மண்ணிலிருந்து தமிழினம் விலகிச் செல்ல முடியாது என பிரபாகரன் சொல்லி இருக்கிறார்.
போராடத்தான் வேண்டும் என்று 15 ஆண்டுகளாக இந்த மண்ணில் இருந்து வருகிறோம். வாழ்க, ஒழிக என்று கோஷம் இல்லாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. தலைவன் வாழ்க என்று கூறுபவர்கள் அல்ல நாம், தமிழ்த்தாய் வாழ்க என்று கூறுபவர்கள். உலகத்தின் பல்வேறு நிலப்பரப்பை வென்றவர்கள் நம் முன்னோர்கள். எந்த மக்களையும் அடிமைப்படுத்தி நம் முன்னோர்கள் வாழவில்லை. தமிழன் மக்களை அடிமைப்படுத்தி ஆண்டான் என்ற செய்தி எங்கேயாவது உண்டா?
சிங்களவர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆள நினைத்தால் அமைதியாக இருக்க நாம் எலிகள் அல்ல புலிகள். மூவேந்தர்கள் வழியில் வந்தவர்கள். ஈ-க்கு இரக்கம் காட்டியவர்களின் வாரிசுகள், காக்கை, குஞ்சுகள் எங்கள் சாதி என்ற சொன்னவர்கள். ஈவு இரக்கம் இன்றி கொல்லப்பட்டது இன்றுதான். வரலாற்றில் பெருந்துயரம் ஈழத் தமிழினப் படுகொலை. மாட்டுக்கு நீதி சொன்ன வாரிசுகளுக்கு உலகத்தில் நீதி சொல்ல ஆளில்லை.
ஒன்று, இரண்டு கோடி மக்களுக்கு தனி நாடு இருக்கும்போது, 11 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் மக்கள் ஏன் தனி நாடு கேட்கக்கூடாது? மூத்த மொழி தமிழ் மொழி அழிகிறது. மொழி அழிந்தால் இனம் அழியும். நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம், பலத்தை இழந்தால் இனத்தை இழப்போம் என நிலத்தைக் காக்கப் பிறந்தவன் பிரபாகரன். நாம் இல்லையென்றால் இந்தச் சாவைப் பற்றிப் பேச நாவு இருக்குமா? இதைப் பற்றிப் பேச ஒருவன் கூட கிடையாது. கடைசியாகத் தலைவனைச் சந்தித்த மகன் நான் தான். எனக்கும் என் தலைவனுக்குக் கடைசியில் என்ன நடந்தது என இருவருக்கும் தான் தெரியும். விடுதலைப் புலிகளைக் கொல்ல வேண்டும் என்று முயற்சித்தது இங்குள்ள ஆட்சியாளர்கள் தான்.
ஆனால் அவர்கள் தான் இன்றும் ஆட்சியாளர்களாக உள்ளனர். இறுதிக்கட்டப் போரில் அமெரிக்கா தலையிட்டு, பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்ட தலைவர்களைப் பாதுகாத்து ஒரு அரசியல் தீர்வைக் கொண்டுவர முயற்சி செய்தது. ஆனால், அன்று இந்திய ஆட்சியாளர்களும், குறிப்பாகத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும், தலைவர்களும் அதனை விரும்பவில்லை. பிரபாகரன் அங்கிருந்தால், இவர்களின் எதிர்கால அரசியலுக்கு ஆபத்தாகவும், இடையூறாகவும் இருக்கும் என்று கருதினார்கள். அதனால், அந்தப் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என விரும்பினார்கள் என எழுத்தாளர் சிவசங்கர் மேனன் தனது வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் என்ன சம்பந்தம்? காங்கிரசை வீழ்த்திப் பதவிக்கு வந்தது திமுக. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர் ரெட்டி மறைவுக்குத் தமிழ்நாட்டில் பொது விடுமுறை அறிவித்தார் கருணாநிதி. அந்த நேரத்தில் ஈழத்திலும் போர் நடந்துகொண்டிருக்கிறது. முத்துராமலிங்கத் தேவர், காமராஜர், அண்ணா உள்ளிட்டோர் மறைவுக்கு ஆந்திராவில் விடுமுறை உண்டா? ஆனால், இங்கு ஏன் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் மறைவுக்கு விடுமுறை என்றால் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி மகிழ்வார் என்பதற்காக விடுக்கப்பட்டது.
மே 18 அன்று பிரபாகரன் இறந்த நாள், தமிழினம் அழிந்த நாள். அன்று தமிழினத் துக்க நாள் என அறிவித்து விடுமுறை விட முடியாதா? திமுக கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட முடியாதா? மாவீரர் நாளை அனுசரிக்கவில்லை, சரி. ஆனால், தமிழர்கள் கொன்று அழிக்கப்பட்ட நாளான இன்று தமிழ்நாடு முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வருத்தச் செய்தியை வெளியிட்டனரா? காரணம் இதில் அவர்களுக்கு அரசியல் லாபமும் வாக்கும் இல்லை எனக் கருதுகிறார்கள்” என சீமான் ஆவேசமாகப் பேசினார்.