2015 -ஆம் ஆண்டு பெண் ஒருவர் கொடுத்த வழக்கில் 20 நாட்கள் வருண் குமார் சிறையில் இருந்த அவருக்கு எப்படி நற்பெயர் இருக்கும் என சீமான் தரப்பு நீதிமன்றத்தில் வாதங்களை வைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனின் செல்போன்களில் இருந்த ஆடியோக்களை எடுத்து கசிய விட்டதாக திருச்சி சரக காவல்துறைத் துணைத்தலைவர் வருண்குமார் மீது சீமான் புகார் கூறி இருந்தார்.
இதனையடுத்து திருச்சி சரக காவல்துறைத் துணைத்தலைவர் வருண்குமார் மற்றும் நாதக கட்சியினர் வார்த்தைப்போர் முற்றியது. இதைத்தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக காவல்துறைத் துணைத்தலைவர் வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே வருண் குமார் தரப்பு விளக்கம் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று சீமான் தரப்பு விளக்கம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது சென்னை எழும்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது திருச்சி சரக காவல்துறைத் துணைத்தலைவர் வருண்குமார் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தான் சீமான் பதில் அளித்ததாகவும், எழும்பூரில் பேசியதை திருச்சியில் பேசியதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் விசாரிக்க உகந்ததல்ல என்றும் சீமான் தரப்பு தெரிவித்தது. நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக வருண் குமார் தரப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டிய சீமான் தரப்பு, 2015 -ஆம் ஆண்டு பெண் ஒருவர் கொடுத்த வழக்கில் 20 நாட்கள் வருண் குமார் சிறையில் இருந்ததாகவும், அவருக்கு எப்படி நற்பெயர் இருக்கும் என்றும் கேள்வி எழுப்பியது.
எனவே இந்த வழக்கு சீமானுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டே தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சீமான் தரப்பு கோரியது. இதைக் கேட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூன் 4 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.