கே.பி. முனுசாமி: டாஸ்மாக் கடைகளாக செயல்படும் திமுகவினர்..! அரசு வருமானம், திமுகவினர் பையில்..!

டாஸ்மாக் கடைகளில் விற்னை செய்ய வேண்டிய மது வகைகளை திமுகவினர் கள்ளத்தனமாக விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். திருவண்ணாமலையில் நேற்று இரவு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி சிறப்புரையாற்றினார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கே.பி.முனுசாமி பதிலளித்தார். தமிழகத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி குழு அமைத்துள்ளார். அரசியல் களப் பணியை மாவட்ட வாரியாக செய்வதற்கு உந்து சக்தியாக, கள ஆய்வு அமையும்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து சாத்திய கூறுகளையும் ஆய்வு செய்து, கிளை நிர்வாகிகள், தொண்டர்களை ஒருங்கிணைத்து, திமுக ஆட்சியில் உள்ள தவறுகள் மற்றும் இயலாமைகளை மக்களிடத்தில் எடுத்து சொல்லி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்கு கள ஆய்வு துணையாக இருக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக செயலிழந்து இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம், ஒரு இடத்தில் வன்முறை உருவாகிறது என்றால், சமூக விரோத சக்திகள் ஆதாயம் தேடும் அளவில் எதாவது செய்யும். அதன்படி, சமூக விரோத சக்திகள் மூலமாக கஞ்சா, போதை பொருள், அபின் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் விற்னை செய்ய வேண்டிய மது வகைகளை திமுகவினர் கள்ளத்தனமாக விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். டாஸ்மாக் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருமானம், திமுகவினருக்கு சென்று கொண்டிருக்கிறது ன கே.பி.முனுசாமி தெரிவித்தார்.