தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த வியாக்கிழமை அன்று சென்னை கொளத்தூர் தொகுதியில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டார். கொளத்தூர் அகரம் சந்திப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அண்ணாமலை பேசினார். ‛அப்போது அண்ணாமலை பேசுகையில், “சிங்காரச் சென்னை என்று பெயர் மட்டும் வைத்துவிட்டு, ஒவ்வொரு ஆண்டும், மழை வெள்ளத்தில் சென்னையை தத்தளிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஊழல் கட்சிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். பல ஆயிரம் கோடி செலவு செய்திருக்கிறோம், 98% வடிகால் பணிகள் நிறைவடைந்து விட்டன என்று பொய் சொல்லி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கட்சிகள் இல்லாமல், ஊழலற்ற, நேர்மையான, சாமானிய மக்களுக்கான அரசு அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.
வடசென்னையில் தரமான சாலைகள், சுத்தமான குடிநீர் வசதி, சுகாதார மேம்பாடு என எதுவுமே கிடைக்கப் பெறாமல் மக்கள் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால், எளிய மக்கள் படும் துன்பங்களை அறிந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சென்னையின் பாராளுமன்ற உறுப்பினர்களாக தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும், மத்திய சென்னையில் தயாநிதி மாறனும், வடசென்னையில் கலாநிதி வீராசாமியும் பதவிக்கு வருவதற்கு அவர்களிடம் இருந்த ஒரே தகுதி வாரிசு என்பதுதான். ஏழை எளிய சாமானிய மக்களின் வலி இவர்களுக்கு எப்படித் தெரியும்? சென்னை பெருவெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ரூ.10,500 வழங்கப்பட்டிருக்க வேண்டும். பாஜக சார்பாக, ரூ.10,000 வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தினோம். ஆனால், திமுக ரூ.6,000 மட்டுமே கொடுத்தது.
அந்தப் பணத்திலும், 75% பணம் மத்திய அரசின் பங்காகும். 25% மட்டுமே திமுக அரசின் பங்கு. சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு, ரூ.1,000 கோடி நிதி கொடுக்கப்பட்டுள்ளது. மழை நீர் வடிகாலுக்கு என தனியாக ரூ.1,300 கோடியும், மற்றும் நீர் நிலைகளின் கரைகளை மேம்படுத்த ரூ.560 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், இவை அனைத்தையும் தமிழக அரசு என்ன செய்தது என்பது கேள்விக்குறி தான். தரமான சாலைகள், சுத்தமான குடிநீர், சுகாதாரமான நகரம் என எந்த அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பாஜக நிர்வாகிககள் பங்கேற்றனர். இதில் பாஜக பிரமுகரும், அனைத்து இந்து அமைப்புகளின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சென்னை கொளத்தூர் வெற்றி நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற ரவி) பங்கேற்றார். பொதுக்கூட்டம் முடிந்த பின்னரும் பாஜக கட்சியினர் பயங்கர சத்தத்துடன் மேளங்களை இசைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர்.
அப்போது பாஜவில் நிர்வாகி, அனைத்து இந்து அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரான ரவிச்சந்திரன் என்ற நபர், அங்கு பணியில் இருந்த வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் கணேஷ்குமார் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கணேஷ் குமார் சாலையின் நடுவே நின்று மேளம் அடிக்காதீர்கள், பொதுமக்களுக்கு வழிவிட்டு ஓரமாக நில்லுங்கள் எனக் கூறியுள்ளார். இதற்கு ரவிச்சந்திரன், கணேஷ் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி அனைவரின் முன்னிலையிலும் அவமானப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வில்லிவாக்கம் ஆய்வாளர் பிரிதிவிராஜ் சம்பவ இடத்திற்கு சென்று ரவிச்சந்திரனை கலைந்து போகும் படி கூறியுள்ளார். ஆனால் ரவிச்சந்திரன், ஆய்வாளரை பார்த்து நான் யார் என்று தெரியுமா நான் தாண்டா ரவிச்சந்திரன் எனது பெயரை கேட்டாலே பெரம்பூரே நடுங்கும் என ஒருமையில் பேசி, ஆய்வாளரை அடிக்க பாய்ந்துள்ளார். காவல்துறையினர் அவரை தடுத்து எச்சரித்ததால், ரவிச்சந்திரன் அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து காவலர் கணேஷ்குமார் செம்பியம் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வீடியோ மற்றும் புகைப்படத்துடன் கூடிய ஆதாரத்துடன் புகார் அளித்தார். ரவிச்சந்திரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.