எடப்பாடி பழனிசாமி vs துரைமுருகன்: “நீங்க விவசாயினா நாங்க என்ன IAS ஆபீசரா..!?”

“நீங்க விவசாயினா? நாங்க என்ன IAS அதிகாரியா?” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் ரிப்ளை கொடுத்துள்ளார். நீர்வளத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. விவசாயி என எடப்பாடி பழனிசாமி பேசியதைச் சுட்டிக்காட்டி அமைச்சர் துரைமுருகன், “நீங்க விவசாயினா? நாங்க என்ன IAS அதிகாரியா?.. நானும் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவன் தான். நானும் ஏர் ஓட்டும் வேலை எல்லாம் பார்த்தவன் தான். நல்லா சவுண்ட கிளப்புறீங்க சார்.” என எடப்பாடி பழனிசாமியை நோக்கிப் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. நீர்வளத்துறை மானியக் கோரிக்கையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிய நிலையில் அவருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துப் பேசினார். அப்போது, எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அண்டை மாநில முதலமைச்சர்களுடன் தற்போது நெருக்கமாக இருக்கும் போது, நமது முதலமைச்சர் தண்ணீர் பிரச்னையை சரி செய்யலாமே?

அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கையில், நீங்கள் முதலமைச்சராக இருக்கும் போது அண்டை மாநில முதலமைச்சர்கள் விரோதியாக இருந்தார்களா? எத்தனையோ ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. அவற்றால் பயனில்லை என்றுதான் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம். இப்போது போய் நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் என உச்ச நீதிமன்றம் கூறிவிடும். வி.பி.சிங் ஆட்சிக்காலத்தின் போது, பேசிப் பாருங்கள் என கலைஞரிடம் அவர் தெரிவித்தார். இனி பேச முடியாது என கலைஞர் கூறியதால்தான், காவிரி தீர்ப்பாயம் நமக்கு கிடைத்தது. அண்டை மாநிலங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்வதால், பேச்சில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

மேகதாது விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு அளித்த கர்நாடக அரசு, காவிரி மேலாணை வாரியத்தில் விவாதிக்க வேண்டும் என்றனர். நம்மை மடக்க சொலிசிட்டர் ஜெனரலிடம் முறையிட்டனர். அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று, காவிரி ஆணையத்திற்கு மேகதாது குறித்துப் பேச உரிமை இல்லை என்று நாம் கூறியதால்தான், அந்த விவாதம் கைவிடப்பட்ட திட்ட அறிக்கை திரும்ப அனுப்பப்பட்டது.

தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் காவிரியில் எந்த அணையும் கட்ட முடியாது. திமுக கொண்டு வந்ததாலேயே தாமிரபரணி – கருமேனியாறு திட்டத்தை அதிமுக அரசு நிறுத்தியது.”நாங்கள் மாற்றான் தாய் மனதுடன் செயல்படவில்லை. நீங்கள் தான் அப்படி செய்தீர்கள். காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக உச்சநீதிமன்றத்தில் 22 வழக்குகளை தொடர்ந்துள்ளதாகவும், இதன் மூலம் தமிழக உரிமைகளை பாதுகாக்க போராடி வருகிறோம்.

அண்டை மாநிலங்களுக்கு கனிமவளம் கொண்டு செல்வது, இப்போதுதான் நடப்பது போல காட்டப்படுகிறது. அதிமுக ஆட்சியிலும் விற்பனை செய்யப்பட்டன. கனிமங்களை எடுக்கக் கூடாது என ஒருவர் வழக்கு போட்டார். சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதால் தடை செய்ய முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது. அனுமதியின்றி கனிம வளங்கள் கொண்டு சென்றதாக கடந்த 4 ஆண்டுகளில் 21,161 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ட்ரோன்கள் மூலம் குவாரிகளில் ஆய்வு நடத்தி, அனுமதிக்கப்பட்ட அளவை விட வெட்டி எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளால், அரசின் டாமின் நிறுவனம் லாபத்தை ஈட்டியுள்ளது.” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.