விஜய் கட்சி தொடங்கி உள்ளாரே என்ற கேள்விக்கு தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்குவதற்கு அனைவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி தெரிவித்தார். புதுக்கோட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் , 2019-20-ல் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர். இந்த நிலையை மாற்றத்தான், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றினோம்.
புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் காவிரி- வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தோம். ஆனால், அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பதாலேயே இந்த திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், இந்த திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
பொதுமக்கள், அரசியல்வாதிகள் மட்டுமின்றி, காவல் துறையினருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை. சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்குவதற்கு அனைவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது, தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அப்போது மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். எங்கள் ஆட்சியில் முதலீடுகளை ஈர்த்தது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால், திமுக ஆட்சியில் தொழில் முதலீடுகள் குறித்து எதுவும் வெளிப்படைத் தன்மையாக இல்லை. அதனால்தான், அனைத்து எதிர்க்கட்சிகளுமே வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, அதை சந்திப்பதற்கு அதிமுக தயாராக உள்ளது என பழனிசாமி பதிலளித்தார்.