என்னால் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையில்லாமல் பாட முடியும். திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலினால் பாட முடியுமா ? என்று பாஜக தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலாளரான அலிஷா அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காத காரணத்தால் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட நிதியை விடுவிக்க இயலாது என்று அறிவித்துவிட்டது. இந்த விவகாரத்தில் பாஜகவிற்கும், திமுகவிற்கும் சமூக வலைதளங்களில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலாளரான அலிஷா அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கள் வீட்டில் நாங்கள் பயன்படுத்தும் மொழி உருது.
நான் ஆங்கில வழி கல்வியில் தான் படித்தேன். என்னுடைய ரேஸிங் துறையில் சிறந்து விளங்கிய இஸ்லாமிய பெண் என்பதால். நான் பாஜகவில் இணைந்தது பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் புரிதல் இல்லாமல் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவில் இணைந்தேன். நான் பாஜகவில் இணைந்த ஒரே காரணத்திற்காக திமுக ஊடகங்கள் என்னை போட்டி போட்டுக் கொண்டு நேர்காணல் எடுத்தனர். அதன் சூழ்ச்சியும் திமுகவின் அரசியலும் எனக்கு அப்போது தெரியவில்லை. என்னை பாஜகவில் இருந்து வெளியேற்ற திமுக சார்பில் இருந்து என்னுடைய தொழில் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பல அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.
ஒரு படி மேல் சென்று நீங்கள் திமுகவில் இணையுங்கள் உங்களுக்கு பெரிய பொறுப்பு கொடுக்கிறோம் என்றும் கூறினார்கள். எனக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்னவென்றால் நான் ஒரு இஸ்லாமிய பெண். இஸ்லாமியர்களுடைய வாக்கு ஒன்று கூட பாஜக பக்கம் போக கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறார்கள்.
நான் மறுபடியும் சொல்கிறேன் நான் தமிழ் பாரம்பரிய குடும்பம் கிடையாது தமிழகத்தில் பிறந்து உருது மொழியை பேசும் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவள். பாரம்பரிய தமிழ் குடும்பத்தை சேர்ந்த உதயநிதிக்கு ஒரு சவால். இன்று என்னால் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையில்லாமல் பாட முடியும்.திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலினால் பாட முடியுமா ?” என அலிஷா அப்துல்லா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.