இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் பவன் கல்யாண் மீது நடவடிக்கை எடுங்கள் ..!

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்தார். அந்த புகாரில், லட்டு விவகாரத்தில் எந்த வித தொடர்பும் இல்லாத தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் நேற்று தரிசனம் செய்த பவன் கல்யாண் பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, “இங்கே நிறைய தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதால் தமிழிலேயே சொல்கிறேன். சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி. அதை நாசம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்லியிருக்கிறார்.

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு சொல்லிக் கொள்கிறேன். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்கமுடியாது. சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழித்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது.

சனாதன தர்மத்தின் மீதான தாக்குதலை யாரும் ஒருபோதும் கண்டிப்பதில்லை. யாரும் கண்டிக்காவிட்டாலும் தவறு எப்போதும் தவறுதான். நீங்கள் அரசியல்ரீதியாக சரியாக இருக்க விரும்புகிறீர்கள். ஆனால் நான் உண்மையை பேச விரும்புகிறேன். மதச்சார்பின்மை என்பது ஒரு வழிப் பாதை அல்ல. அது இருவழிப் பாதை. மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும்” என பவன் கல்யாண் பேசினார்.

பவன் கல்யாணின் இந்த கருத்துக்கு திமுக தொண்டர்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்தார். அந்த புகாரில், லட்டு விவகாரத்தில் எந்த வித தொடர்பும் இல்லாத தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் வகையில் பேசிய பவன் கல்யாண் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.