அரசியல் பிரமுகர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஒரு கோடி சிக்கியது..!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் ஆவணமின்றி 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் மற்றும் அதிக எண்ணிக்கையில் பரிசு பொருட்கள் எடுத்து செல்ல கூடாது என தேசிய நெடுஞ்சாலை, மாநகரின் முக்கிய பகுதிகள், மாவட்ட எல்லையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு பகலாக சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எட்டரை பகுதி ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசன். இவரது அன்பரசன், அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதியின் தம்பி ஆவார். இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைப்பு வந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எட்டரை பகுதிக்கு விரைந்தனர். அங்கே அரசியல் பிரமுகர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது அங்கு ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது.

இதனை‌ அடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் தகவல் கொடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். தற்பொழுது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் எதற்காக ஒரு கோடி ரூபாய் இவர் வீட்டில் வைத்துள்ளார்? தேர்தல் பணம் பட்டுவாடா செய்ய இருந்த பணமா? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.