அன்புமணி ராமதாஸ் பதிலடி “பாமக இல்லையெனில் அதிமுக 36 தொகுதிகளில் வென்றிருக்காது..!”

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமதாஸ் வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி கூட்டணியை மாற்றி வருகிறார். வேடந்தாங்கல் பறவை தான் ஏரியில் தண்ணீர் இருக்கும் போது வரும். பின்னர் குளத்தில் தண்ணீர் வற்றியதும் சென்றுவிடும். மறுபடி தண்ணீர் வந்ததும் வரும். இது போல தான் பாமக. இவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என தெரிவித்திருந்தார்.

பழனிசாமியின் விமர்சனத்துக்கு இன்று பதில் அளித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “நாங்கள் வேடந்தாங்கல் பறவை கிடையாது. வேடந்தாங்கல் சரணாலயம். எங்களிடம் யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். எங்களின் உயிரை, உழைப்பை கொடுப்போம். அவர்களுக்கு வாழ்க்கை கொடுப்போம். ‘10.5 இடஒதுக்கீடு கொடுத்தோம், ஆனால் அவர்கள் எங்களுடன் கூட்டணி வரவில்லை’ என்று சொல்கிறார் பழனிசாமி. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. 2019-ல் அதிமுகவுக்கு நாங்கள் ஆட்சியை கொடுத்தோம். நாங்கள் இல்லையென்றால் தொடர்ந்து ஆட்சி நடத்த முடியாத சூழல் இருந்தது. எங்களால் தான் இரண்டு ஆண்டுகள் அதிமுக ஆட்சியும் இருந்தது. எடப்பாடியும் முதலமைச்சராக இருந்தார்.

அந்த இரண்டு ஆண்டுகளில் பல முறை 10.5 இடஒதுக்கீடு குறித்தும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும் வலியுறுத்தினோம். நேரடியாக சென்று கூறினோம், போராட்டம் நடத்தினோம். ஆனால் தேர்தலுக்கு முன்புவரை இழுத்து, தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு கடைசி நாள் இடஒதுக்கீடு கொடுத்தார்கள். தேர்தல் ஆணையம் 4 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கிறது என்றால் 1 மணிக்கு தான் இடஒதுக்கீடு உத்தரவு வெளிவருகிறது. அதற்கு இடையில் நடந்ததை எல்லாம் என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை. உண்மையாகவே அவர்கள் மனதில் பின்தங்கிய சமுதாயத்துக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தால், கொஞ்சம் முன்னதாகவே இடஒதுக்கீடு கொடுத்திருக்கலாம். ஆனால், தேர்தல் கூட்டணி வந்தால் தான் இடஒதுக்கீடு தருவோம் என்று பேசினார்கள். அதுவும் அவசர அவசரமாக இடஒதுக்கீடு கொடுத்தது அதிமுக. அதில் அவ்வளவு பிழைகள். நாங்கள் கேட்டது 16 சதவிகித இடஒதுக்கீடு. ஆனால் கொடுத்தது 10.5 சதவிகித இடஒதுக்கீடுதான்.

நீதிமன்றம் அதை ரத்து செய்துவிட்டது. நீதிமன்றம் ரத்து செய்த பிறகு மீண்டும் அந்த சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பழனிசாமி எங்காவது ஒரு இடத்தில் பேசியிருப்பாரா… இல்லை. இன்று வரை அவர் அதை பேசவில்லை. மீண்டும் அந்த சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று பேச அவருக்கு தைரியம் இருக்கிறதா?. 10.5 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக தான் தோற்றதாக அதிமுக தலைவர்கள் பலமுறை சொல்கிறார்கள். 10.5 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக அதிமுக 66 தொகுதிகளை வென்றது. அதிலும் 36 தொகுதிகள் பாமக பங்களிப்பு இல்லை என்றால் வெற்றிபெற்று இருக்காது. அதிமுக ஆதரவாலும் நாங்கள் 4 தொகுதிகளை வென்றோம். ஆனால் 15 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. கடந்த ஆறு மாதமாக விசிகவையும், சீமானையும் கூட்டணிக்கு அழைத்து கொண்டிருந்தார் பழனிசாமி. அவர்கள் யாரும் வரவில்லை. அதன்பிறகு தான் எங்களை கூட்டணிக்கு அழைத்தார்.

இப்படி அவர்களை பற்றியும் சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால், கூட்டணியை விட்டு வெளியேற முடிவு எடுத்துவிட்டோம். எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் பாமக தனது கொள்கைகளை, சித்தாந்தத்தை விட்டுக்கொடுக்க போவது கிடையாது. ஒரு துளி கூட விட்டுக்கொடுக்காது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.