அண்ணாமலை பிரச்சாரம்: பிஞ்சு போன செருப்பை அவர்கள் தூக்கி எறியவில்லை..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர், வேணுகோபாலை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மத்தியில், மீண்டும் நமது நரேந்திர மோடி 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்றார்.

தமிழ்நாட்டுக்கு மோடி எதுவும் செய்யவில்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள். 45 லட்சம் விவசாயிகளுக்கு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. சிலிண்டருக்கு ரூ.400 மானியம் தரப்படுவதால் 40 லட்சம் பேர் பயனடைகின்றனர். பயனாளியின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு நேரடியாகப் பணம் செலுத்திவிடுவதால் இவர்களால் கமிஷன் அடிக்க முடியவில்லை. அதனால்தான் மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகின்றனர்.

மேலும் பேசிய அண்ணாமலை, “1980ல் பேசிய அதே விஷயத்தை சம்பந்தமே இல்லாமல் இன்றைக்கும் பேசுகிறார்கள். இந்தி, சமஸ்கிருதம், வடக்கு தெற்கு என திமுக பேசிக் கொண்டிருக்கிறது. இன்னும் அந்த பிஞ்சு போன செருப்பை அவர்கள் தூக்கி எறியவில்லை.” என அண்ணாமலை பேசினார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஏராளமானோர் தங்கள் இன்னுயிரை ஈந்த நிலையில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பிஞ்சு போன செருப்பு எனக் குறிப்பிட்டு அண்ணாமலை பேசியுள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. அண்ணாமலை தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.