அண்ணாமலை குப்புசாமி: “உங்களிடம் வாக்கு சேகரிக்க நான் வரவில்லை..! ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன்..!

தமிழ்நாட்டில் “நாளை மறுநாள் ஏப்.19-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் சூடுபிடிக்க தொடங்கிய பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. இந்நிலையில், கோயம்புத்தூர் பாஜக வேட்பாளர் அண்ணாமலை குப்புசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கோயம்புத்தூர் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை குப்புசாமி அப்பகுதியில் உள்ள நானா, நானி என்ற முதியோர் இல்லத்தில் கண்கலங்கியபடி பெரியவர்களிடம் ஆசி பெற்றார்.

இதனையடுத்து அண்ணாமலை குப்புசாமி பேசுகையில், “உங்களிடம் வாக்கு சேகரிக்க நான் வரவில்லை. உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன். இங்கு காணப்படும் அன்பை போல நாங்கள் பிரச்சாரத்துக்கு செல்லும் வழியில் பெரியவர்கள் பலர் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கால் கடுக்க காத்திருந்து எனக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.

இவற்றை பார்க்கும்போது நம் நாட்டின் மீதும் நமது பிரதமர் மீதும் நீங்கள் எல்லாம் கொண்டுள்ள அன்பை வெளிக் காட்டுகிறது. எதிர்வரும் காலங்களில் இந்தியா மிகச்சிறந்த வளர்ச்சியை பெறும். நமது குழந்தைகளுக்கு வளமான இந்தியாவை வழங்க வேண்டியது நம் பொறுப்பு. நம் நாடு 450 ஆண்டுகளுக்கு முன் இருந்த வளமான இடத்திற்கு செல்லத் தான் போகிறது” என அண்ணாமலை குப்புசாமி பேசினார்.