2024 -ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெல்லும் முனைப்பில் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஜூலை 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் ‛என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த பாதயாத்திரையை நடத்தி வருகிறார்.
மதுரை மாவட்டத்தில் தற்போது யாத்திரை நடக்கும் நிலையில் நேற்று டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. அடுத்த ஆண்டு வரை இந்த பாதயாத்திரை தொடரும் நிலையில், இடையிடையே மற்ற பணிகளிலும், கட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களிலும் அண்ணாமலை பங்கேற்பார். இத்தகைய சூழலில், மதுரையில் பாதயாத்திரை நடத்தி வரும் நிலையில் அண்ணாமலை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் அழைப்பின் பேரில் பாதயாத்திரையை முடித்துக்கொண்டு டெல்லி கிளம்புவதாக கூறப்பட்டது.
மதுரையில் பாதயாத்திரை தொடங்கிய பிறகு அண்ணாமலை அளித்த பேட்டியில், “நாங்கள் ஓ பன்னீர் செல்வத்தை ஒதுக்கி வைக்கவில்லை. அனைவரையும் அரவணைத்து செல்கிறோம்” என்றார். ஓ பன்னீர் செல்வம் பற்றி அண்ணாமலை பேசியது அதிமுகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு அண்ணாமலை “யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு தரம் உள்ளது…. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூவுக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது” என தெரிவித்தது மட்டுமின்றி பாஜக தலைவர்கள் செல்லூர் ராஜூவை விமர்சனம் செய்தனர்.
இதனால் அதிமுக பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த பின்னணியில் தான் அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலை டெல்லி செல்லவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரையில் பாதயாத்திரையை முடித்துக்கொண்டு சென்னைக்கு அண்ணாமலை செல்கிறார். அடுத்த 2 நாட்களுக்கு அண்ணாமலை சென்னையில் இருப்பார் என பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.