அட்டை பெட்டிகளுக்கு நடுவே அமர்ந்து பணி செய்த அதிஷி மெர்லினா சிங்..!

டெல்லியில் முதலமைச்சர் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் முதலமைச்சர் அதிஷி மெர்லினா சிங் தனது கல்காஜி குடியிருப்பில் இருந்து பணிகளை மேற்கொண்டார்.

டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து முதலமைச்சராக ஆம் ஆத்மியின் அதிஷி மெர்லினா சிங் பொறுப்பேற்றுக் கொண்டார். அரவிந்த் கெஜ்ரிவால் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்த நிலையில், முதலமைச்சர் அதிஷி மெர்லினா சிங் அங்கு குடியேறினார்.

 

இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதலமைச்சரின் உடைமைகளை நேற்று முன்தினம் எடுத்து வெளியே வைத்து முதலமைச்சரின் இல்லத்தை பூட்டி சீல் வைத்தனர். பொதுப்பணித்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே முதலமைச்சர் பங்களாவில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிஷி மெர்லினா சிங் தனது கல்காஜி குடியிருப்புக்கு திரும்பினார். அங்கு அவரது உடைமைகள் வைத்த பெட்டிகளுக்கு நடுவே அமர்ந்து அரசு கோப்புக்களில் கையெழுத்திடுகிறார். இந்த புகைப்படத்தை ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் சிங், ‘‘டெல்லி மக்களுக்காக உழைக்கும் அதிஷி மெர்லினா சிங்கின் உறுதிப்பாட்டை பாஜகவால் பறிக்க முடியாது. நவராத்திரி விழா நடந்து வரும் நிலையில் ஒரு பெண் முதலமைச்சரின் பொருட்களை குடியிருப்பில் இருந்து பாஜக தூக்கி எறிந்துள்ளது. முதலமைச்சரிரின் இல்லத்தை பலவந்தமாக கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது ஆளுநர் சக்சேனா உத்தரவின்பேரில் தான் முதலமைச்சரின் உடைமைகள் அகற்றப்பட்டுள்ளது” என சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.