திருச்சி மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “பல முனைகளிலிருந்து அதிமுகவை தாக்கி வருகிறார்கள். தனி ஒரு மனிதனாக எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வருகிறார்.” “அதிமுக கட்சியின் சில மாவட்டங்களில் கோஷ்டி பூசல்கள் உள்ளன. அதனை முதலில் சரி செய்ய வேண்டும். ஆபரேஷன் செய்தால் மட்டும் தான் மருத்துவம் பலிக்கும் என்ற நிலை உள்ளது. கூட்டணிக்கு வருபவர்கள் 20 சீட் கொடுங்க, ரூ. 50 அல்லது ரூ. 100 கோடி கொடுங்க என்று கேட்கின்றனர்.”
“கூட்டணி குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டார். கூட்டணி குறித்து நீங்கள் பேட்டி கொடுத்து அதை கெடுத்துவிட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்கு செல்பவர்கள் ஜெயிக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி தான் ஜெயிப்பார்” என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.