Tejashwi Yadav: ‘‘பாபா சாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டம். அதை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை…!

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்டு முதலமைச்சர ஹேமந்த் சோரன் ஆகியோர் கைதை கண்டித்து I.N.D.I.A. கூட்டணி கட்சியின் கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த ராகுல் காந்தி திடீர் உடல்நலக்குறைவால் கூட்டத்தை தவிர்த்துள்ளார். இதனை அறிவித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “ராகுல் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரால் இன்று டெல்லியை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தில் பங்கேற்பார்” என தெரிவித்திருந்தார்.

I.N.D.I.A. கூட்டணி சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பஞ்சாப் முதலமைச்சர் பகவந் சிங் மான், அர்விந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய தேஜஸ்வி யாதவ், “பாஜக தலைவர்கள் மீண்டும் மீண்டும் அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பேசுகின்றனர். இது பாபா சாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டம். அதை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை.” என தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.