மல்யுத்த வீரர்களுடன் மல்யுத்தம் செய்யும் ராகுல்காந்தி..!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் கடந்த ஜனவரியில் இது தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது. நாட்டின் கொடியை சர்வதேச அரங்கில் உயர்த்த வீராங்கனைகள் இந்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டுமா? என்று அரசியல் கட்சியினர் கேள்வி யெழுப்பினர். இந்த போராட்டத்தையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் மேரிகோம் தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனைகள், வீரர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து புகார்களை அளித்தனர். பின்னர் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது. ஆனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வீரர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

நிலைமையை சமாளிக்க இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் பிரிஜ் பூஷனுக்கு தொடர்புடைய யாரும் போட்டியிட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த போட்டியிலிருந்தே விலகுவதாக வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க பேட்டியளித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக பத்மஸ்ரீ விருது பெற்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தனது பத்ம விருதை திரும்ப ஒப்படைப்பதாக கூறினார்.

அதேபோல கடந்த 22ம் தேதி, பிரதமரிடம் விருதை ஒப்படைக்க டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றார். ஆனால் காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால், பிரதமரின் வீட்டு வாசலிலேயே அவர் விருதை வைத்துவிட்டு திரும்பிவிட்டார். இதன் தொடர்ச்சியாக விரேந்திர சிங்கும் தனது விருதை திரும்ப ஒப்படைப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் பல வருட கடின உழைப்பு, பொறுமை மற்றும் ஈடு இணையற்ற ஒழுக்கம் ஆகியவற்றுடன் தனது இரத்தத்தாலும் வியர்வையாலும் மண்ணை பாசனம் செய்த பிறகு, ஒரு வீரர் தனது நாட்டிற்கு ஒரு பதக்கத்தை கொண்டு வருகிறார்.

இன்று, அவர் ஜஜ்ஜாரின் சாரா கிராமத்தில் உள்ள சகோதரர் வீரேந்திர ஆர்யாவின் அரங்கை அடைந்து, ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் பிற மல்யுத்த வீரர்களுடன் கலந்துரையாடினார். ஒரே ஒரு கேள்வி – இந்த வீரர்கள், இந்தியாவின் மகள்கள், தங்கள் அரங்கில் சண்டையை விட்டுவிட்டு, தங்கள் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் தெருவில் போராடினால், அவர்களின் குழந்தைகளை இந்த பாதையைத் தேர்ந்தெடுக்க யார் ஊக்குவிப்பார்கள்?

இவர்கள் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவிகள், நேரடியானவர்கள், எளிமையானவர்கள், மூவர்ணக் கொடிக்கு சேவை செய்யட்டும். அவர்கள் முழு மரியாதையுடனும் மரியாதையுடனும் இந்தியாவை பெருமைப்படுத்தட்டும் என பதிவிட்டுள்ளார். மேலும் ராகுல்காந்தி மல்யுத்த வீரர்களுடன் மல்யுத்தம் செய்யும் பயிற்சி மேற்கொண்டார்.