#westandforwomenharassment பேனரை பார்த்து பெண்கள் ஷாக்..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழக வெற்றி கழக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் வன்கொடுமை செய்யப்படுவதற்கு நாங்கள் துணை நிற்கிறோம் என தமிழக வெற்றிக் கழகத்தினர் பேனர் வைத்திருப்பது சமூக வளைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில்,” உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்ல ஆசை தான்.

ஆனால் பாதுகாப்பே இல்லாமல் எப்படி மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்வது. நாம் அனைவரும் சேர்ந்து தான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே இந்த அரசை 2026-ல் வீட்டுக்கு அனுப்புவோம்” என பேசி இருந்தார்.

இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், வேலூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் வைத்த பேனர் தான் தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது. we stand against women harassment என்பதற்கு பதிலாக we stand for women harassment என ஆங்கில வாசகத்தோடு வேலூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் பேனர் வைத்திருக்கின்றனர். அதில் கையெழுத்திட வேண்டும் எனவும் பெண்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

சில படித்த பெண்கள் அதனை படித்து பார்த்துவிட்டு we stand against women harassment என்றால் தான் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம் என்று அர்த்தம். we stand for women harassment என நீங்கள் பேனர் வைத்திருப்பது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்பது போல இருக்கிறது என கூறி கையெழுத்திட மறுத்துவிட்டனர். தற்போது இந்த பேனர் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.