மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் அமைப்பினர் டெல்லியின் புறநகர் பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறத் தயாராக இல்லை, இதுவரை விவசாயிகளுக்கும், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் இடையே 12 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் முசாபர் நகரில் கிசான் மகா பஞ்சாயத்தில் மகாராஷ்டிரா, கர்நாடகம், பஞ்சாப், உ.பி., ஹரியாணா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய பாரதிய கிசான் யூனியன் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகைத் , “இதுபோன்ற கிசான் மகா பஞ்சாயத்துக் கூட்டம் நாடு முழுவதும் நடத்தப்படும். நாட்டை விற்பனை செய்வதிலிருந்து தடுப்போம். விவசாயிகள் காக்கப்பட வேண்டும், நாடு காக்கப்பட வேண்டும். வர்த்தகம், இளைஞர்கள் காப்பாற்றப் பட வேண்டும் என்பது தான் இந்தப் பேரணியின் நோக்கமாகும் என தெரிவித்தார்.