தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை மக்களுக்காக செய்துள்ளோம். அப்படி இருக்கும் போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதிமுகவை எப்படி விமர்சிப்பார்?என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, அதிமுக மக்களுக்காக தொடங்கி, உழைக்கிற கட்சியாக உள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை மக்களுக்காக செய்துள்ளோம். அப்படி இருக்கும் போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதிமுகவை எப்படி விமர்சிப்பார்? அவர் விமர்சிக்காதது மற்றவர்களின் ஆதங்கமாக உள்ளது. மேலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக கூட்டணி பலமாக இருப்பதாக சொல்வது நம்பத்தகுந்ததாக இல்லை. 3 ஆண்டு காலம் எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தாத திமுக கூட்டணி கட்சிகள், தற்போது ஒவ்வொரு போராட்டமாக அறிவித்து வருகிறார்கள். கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக்கொண்டு திமுக கூட்டணி பலமாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. அதிமுகவில் எந்த ஒரு பிளவும் இல்லை. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி நீக்கப்பட்டுள்ளார்கள். அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு இனிமேல் இடம் கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.